மும்பை: மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வருமான அஜித் பவாரின் ரூ.65 கோடி சொத்துக்களை அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக 2019-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத் துறை அஜித் பவார் மற்றும் 75 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அதன் அடுத்த நகர்வாக தற்போது, அவரது சொந்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ரூ.25 ஆயிரம் கோடி அளவிலான மோசடியில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், சிவசேனா தலைமையிலான மாநில அரசின் துணைமுதல்வராக இருந்து வரும் அஜித்பவாருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி அவரது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அந்நியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடக்கப்பட்ட சொத்துகளில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும், அவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலையும் ஆகியவை அடங்கும். சர்க்கரை ஆலையானது, ஸ்பார்க்ளிங் மண் பரிசோதனை நிறுவனம் ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையில் மிக அதிக அளவிலான பங்குகள் வைத்துள்ளதாகவும், . இதில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுநித்ரா பவார் ஆகியோருக்கு அதிக பங்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2010-ல் மொத்தம் ரூ.65.75 கோடிக்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக என அமலாக்கத்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.