திருச்சி: பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் பேராசிரியரை கைது செய்யுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில், பிரபல பள்ளிகளான பத்மா சேஷாத்திரி, சுசில்ஹரி, மகிரிசி உள்பட பல பள்ளிகள் மீது புகார் கூறப்பட்டு, குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல, ராமநாதபுரம் முதுகளத்தூர் பள்ளிவாசல் பள்ளியில் மாணவிகளை வீட்டுக்கு அழைத்து பாலியல் சேட்டை செய்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால், செனாய்நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளிமீதான விசவாரம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே லயோலா கல்லூரியில் பெண்ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரத்தில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் லயோலா கல்லூரி ரூ.64.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
இநத் நிலையில், தற்போது திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் புகார் கூறியுள்ளனர். தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அதில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். தற்போது மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேராசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆண்டனி ராஜராஜன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியைக்கு எஸ்.ஆண்டனி ராஜராஜன் பாலியல் தொந்தரவுஅளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு 2012-ம்ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஆசிரியை புகார் அளித்தார். எனினும், அந்த புகாரின் மீது கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால், அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மகளிர் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி பிஷப் கல்லூரி மீதான பாலியல் விவகாரத்தில் தமிழகஅரசு மேல்நடவடிக்கை எடுக்குமா?