டில்லி
மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பு வெறும் புரளி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையால் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நிறுவனங்கள் மத்திய பாஜக அரசிடம் உதவி கோரின. இதையொட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுகாதாரம் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுக்கு ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பில் ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்த திட்டங்கள் மூலம் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு அடைந்துள்ள நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீள முடியும் எனவும் அவர் தெரிவித்தர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “மத்திய அரசின் நிதி அமைச்சர் அறிவித்த பொருளாதார தொகுப்பு என்பது தொகுப்பு இல்லை. பாஜகவின் மற்றொரு புரளி ஆகும். இந்த பொருளாதார தொகுப்பை எந்த குடும்பமும் தங்களது வாழ்க்கை, உணவு, மருந்து மற்றும் குழந்தைகள் கல்வி செலவுக்குப் பயன்படுத்த முடியாது” எனப் பதிந்துள்ளார்.