சென்னை: திமுகவின் கோவை தெற்கு மாவட்டப்பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நீக்கம் செய்து  திமுக தலைமை அறிவித்து உள்ளது. அவருக்கு பதிலாக புதிய நிர்வாகி நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், கொங்குமண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்தது. இதுகுறித்து திமுக தலைமை ஆய்வு செய்து வந்தது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலின்போது கடுமையான போட்டி நிலவியது. இந்த தொகுதியை அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் களமிறங்கினார். அவரை எதிர்த்து, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமாரும்,  கமல் ஹாசன் (மநீம), அ அப்துல் வாகப் (நாதக), R.துரைசாமி என்கிற சாலஞ்சர் துரை (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிட்டார்கள். தேர்தலில் 60.72% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவில்  1728 வாக்கு வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்துவது குறித்து திமுக யோசித்து வந்தது. அதன் முதற்படியாக,  திமுகவின் கோவை தெற்கு மாவட்டப்பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக  டாக்டர் வரதராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுக தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீதான நடவடிக்கையை  திமுக தொடங்கி உள்ளது. அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.