புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை பதவி ஏற்கப்போகும் புதிய அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவருக்கு தற்போதுதான் புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே ஏற்பட்டிருந்த அதிகார மோதல் காரணமாக, அமைச்சர்கள் பதவி ஏற்காத நிலை நீடித்து வந்தது. இந்த இழுபறி 55 நாட்களுக்கு பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நாளை புதிய அமைச்சர்களாக பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 5 பேர் பதவி ஏற்க உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6ந்தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங். – பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. அதையடுத்து மே 7ந்தேதி முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வந்தது. 55 நாட்கள் இழுபறிக்குப் பின்பு பாஜகவுக்கு பேரவைத் தலைவர் பதவி, 2 அமைச்சர்கள்; என்.ஆர்.காங்கிரஸுக்கு துணை பேரவைத் தலைவர் பதவி, 3 அமைச்சர்கள் பதவி என முடிவானது. இதுதொடர்பாக அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியாகி உள்ளது.
அதன்படி, பாஜக தரப்பில் நமசிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்களாகிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நாளை (27ந்தேதி) மதியம் 2.30 முதல் 3.15 மணிக்குள் நடத்த பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை முதல்வர் ரங்கசாமி ஏற்றுள்ளார். ஆளுநர் தமிழிசையும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பதவியேற்புக்காக புதுச்சேரி கவர்னர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மொத்தம் 100 பேர் வரை பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெண் எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், 2-வது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். .
முன்னதாக கடந்த 1980-ம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, தற்போது சந்திர பிரியங்கா அமைச்சராக இருக்கிறார்.