சென்னை:
தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.


தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை, தமிழ்நாடு முதன்மைச் செயலர் அறிக்கை 2ஐயும் சீல் ஈட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரைக்கிளை உத்தரவு பிறபித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் பலியாகினர்.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது. தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசிற்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.

மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாகத் தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

அதன்படி தமிழ்நாடு முதன்மை செயலாளர் தரப்பில் செப்டம்பர் மாதம் 2018ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல, எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “எந்தவித ஆயுதமுமின்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது ஏற்புடையதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதேபோல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை, தமிழ்நாடு முதன்மைச் செயலர் அறிக்கை 2ஐயும் சீல் ஈட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் முக்கியத்துவம் கருதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.