மும்பை

டி ஆர் பி அதிகரித்துக் காட்டிய வழக்கில்  ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் மும்பையில் டி ஆர் பி எனப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையைத் தவறாக அதிகரித்துக் காட்டி உள்ளதாக சில தொலைக்காட்சி சேனல்கள் மீது குற்றம் சாட்டினார்.  அதில் ரிபப்ளிக் டிவி, பாக்ஸ் சினிமா மற்றும் ஃபக்த் மராத்தி ஆகிய சேனல்களை அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.  அப்போது வழக்கில் அர்னாப் கோஸ்வாமி பெயர் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதது குறித்து மும்பை காவல்துறையிடம் உயர்நீதிமன்றம் காரணம் கேட்டது.   இதையொட்டி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ரிபப்ளிக் டிவி இயக்குநரும்  ஏ ஆர் ஓ அவுட்லியர் மீடியா உரிமையாளருமான அர்னாப் கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

சுமார் 1800 பக்கங்கள் உள்ள குற்றப்பத்திரிகையில் அவருடன் அதே நிறுவனத்தின் சிவேந்து முலேகர், தலைமை செயல் அதிகாரி பிரியா முகர்ஜி, மற்றும் தலைமை நிதி அதிகாரி சிவசுந்தரம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.   இவர்கள் மீது இ பி கோ 409, 420, 465, 468, 201, 204 மற்றும் 212 சட்டங்களின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கில் முன்னாள் ஒளிபரப்பு ஆய்வுக் குழு தலைமை அலுவலர் பார்த்தோ தாஸ்குப்தாவும் மற்றும் 14 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.