“ரோடுல பிச்சைக்காரங்கள பாக்கறப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பாவமா இருக்கும்.. இவங்களுக்கு ஒரு விடிவு காலம் வராதானு வருத்தப்படுவேன்.. இப்போ, “பிச்சைக்காரங்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்போறோம்”னு மத்திய அரசு சொல்லியிருக்கு…
மத்திய அரசுன்னாலே மோடிதானே.. சென்னைக்கு வர்ற.. அவரை பேட்டி எடுக்கலாம்… பட்.. இது உள்நாட்டு டூர். பிஸியா இருப்பாரு… ஃபாரின் டூர்னா செல்ஃபி எல்லாம் எடுக்ககூட நேரம் இருக்கும்…
ம்.. என்ன செய்யலாம்?
அட.. பிச்சைக்காரங்களுக்கான மறுவாழ்வு திட்டம் பத்தித்தானே கேட்கப்போறோம்.. ஒரு பிச்சைக்காரரையே பேட்டி எடுத்துட்டா…?
ஆபிசிலிருந்து கிளம்பி பராக்கு பாத்துகிட்டே போனேன்.. அடையாறு சிக்னல் பக்கத்துல ரோடு ஓரமா ஒரு பிச்சாக்காரரு கண்ணுல சிக்குனாரு. போற வர்றவங்கிட்ட தானம் கேட்டுகிட்டு இருந்த.வருகிட்ட மெதுவா போயி விசயத்த சொன்னேன்.. “அட.. பொழப்ப பாக்க விடுப்பா.. கிளம்பு”னு விரட்டுனாரு. பையிலேருந்து ஐம்பது ரூபா எடுத்து நீட்டுனேன். ஆச்சரியத்தோட வாங்கி பாக்கெட்டுல வச்சிகிட்டவரு, “இது பீக் அவரு.. பிஸியா இருப்பேன். மதியானம் மூணு மணிக்கா வா”னு டைம் கொடுத்தாரு.
ஷார்ப்பா ரெண்டு அம்பத்தஞ்சுக்கு ஸ்பாட்டுக்கு போயிட்டேன். “வா, தம்பி! ஒன்னைத்தான் எதிர்பாத்துகிட்டே இருந்தேன்”னு வரவேற்பு கொடுத்தாரு. ஏதோ பழ வாடை வந்துச்சு.
பக்கத்துல இருந்த ஒரு பெரிய கல்லுல ஒக்காந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சேன்.
உங்க பேரு?
“குமாரு!”
ஏன் பிச்சை எடுக்கறீங்க..?
சாப்பிடணும்ல..
உழைச்சு சாப்பிடலாமே…?
தம்பி.. இதுவும் உழைப்புதான்.. அட்வைஸ் பண்றதா இருந்தா கெளம்பிரு..
இல்ல இல்ல.. ஸாரி.. எத்தன வருசமா பிச்சை எடுக்கறீங்க..
பதினைஞ்சு வருசமா..
அதுக்கு முன்னால..?
அப்பவும் பிச்சைதான் எடுத்துகிட்டிருந்தேன்..
…..
என்ன தம்பி பேச்சை காணோம்…?
அதில்ல… டக்குனு குழப்பிட்டேன்.. சரி.. உங்க பேமிலி எங்க இருக்காங்க…?
நோ ப்ரசனல்..
சரி.. . விசயத்துக்கு வர்றேன். உங்களை மாதிரி பிச்சாக்காரங்களுக்கு மறுவாழ்வு தர புதுசா திட்டம் போட்டிருக்கறதா மத்திய அரசு சொல்லிருக்கே… தெரியுமா..
ம்.. தெரியும் தெரியும்.. மத்திய அமைச்சரு கிசன் பாலோ, காபியோ சொல்லியிருக்காரு…
அட.. மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சரு கிருஷன் பால் குர்ஜார்தா\ன் சொல்லியிருக்காரு.. உங்களுக்கு எப்புடி தெரியும்..?
மத்தியான டைம்ல கூட்டம் கொறவா இருக்கும். உன்ன மாதிரி எவன் வந்து நம்ம கிட்ட பேச்சுகொடுக்கிறான்.. அந்த டைம்ல பேப்பர் பாப்பேன்…
சரி.. மத்திய அரசு திட்டம் பத்தி என்ன நெனக்கிறீங்க…?
இந்த அரசியல்வாதிங்க, சும்மா பொழுது போகாம எதாவது பேசுவாங்க.. அதெல்லாம் கணக்குலயே எடுத்துக்காதே..
சரி, இப்ப தினசரி எவ்ளோ வருமானம் வருது..?
அது நல்லா வருது.. நீ ஏன் கேக்குற.. வரி போடப்போறியா..? மூணுவேளை திங்கறேன்.. ரெண்டு வேளை குடிக்கிறேன்.. வாழ்க்கை நிம்மதியா போவுது..!
காலு முடியாட்டாலும், கைவேலை செய்யற மாதிரி வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.. வர்றீங்களா..?
என் வேலைய நான் பாத்துக்கிறேன். உன் வேலைய நீ பாரு!
பிச்சை எடுக்கறது தப்புன்னு தோணலையா..?
யாருதாம்பா பி்ச்சை எடுக்கலை..? பத்துலட்ச ரூபாய்க்கு சட்டை வாங்கிபோட்டு ஒபாமாவை வரவேத்த பிரதமரு மோடியே பிச்சை கேக்குறாரு..
என்னது..மோடியா…?”
அட ஆமாம்பா… போன ஜனவரி மாசம் பானிபட்டுல, “பெண் குழந்தைகள வாழ விடுங்கனு உங்க ஒவ்வொருத்தருகிட்டயும் பிச்சை கேக்குறே”ன்னு மோடி சொல்லையா…?
அட. ஆமாம்…
அப்புறம் லிங்கா படத்துல நட்டமாயிடுச்சுன்னு விநியோகஸ்தரு ஒருத்தரு பிச்சை எடுக்கற போராட்டம் நடத்துவோம்னு சொன்னாரே..
ஓ…
இன்னும் கேளு.. அரசியல்வாதிங்க ஓட்டு பிச்சை கேட்டுத்தான்ஆட்சிக்கு வர்றாங்க.. பிச்சை வாங்கித்தான்மக்கள் ஓட்டு போடுறாங்க.. இலவசம்கிற பேர்ல பிச்சை வாங்கற உங்களுக்கு வெட்கமில்ல.. நான் மட்டும் பிச்சை எடுக்க ஏன் வெட்கப்படணும்!..?
சரி, மத்திய அரசோட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை ஏன் வேஸ்ட்டுனு சொல்றீங்க….?
நில அபகரிப்பு சட்டத்த கொண்டுவர துடிக்கிறீங்க.. இப்படி விவசாய நிலங்கள பிடுங்கினா எல்லாரும் பிச்சைதான் எடுக்கணும்.. அதே மாதிரிதான் புதுசு புதுசா பொருளாதார கொள்கைங்கிறீங்க.. அதனால ஏழைங்கதான் பெருகறாங்க… முதல்ல மக்களோட பிழைப்ப கெடுக்காம, புதுசா பிச்சைக்காரங்க உருவாகாம இருங்க.. புண்ணியமா போவும்…. இதான் நான் மோடிக்கு சொல்லிக்கிறது!