சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது கொரோனா 2வது அலை பரவி உள்ளதால், கல்வி நிலையங்களை திறப்பது குறித்து இதுவரை தமிழகஅரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், 14ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் புதிய பாடங்கள் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.