சென்னை:
மிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குதல், உர வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை பாதுகாக்க வசதியாக குளிா்ப்பதன கிட்டங்கி வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் பேசுகையில், ‘தனி நபா் குடும்ப அட்டை வழங்கவும், சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பையும் அளிக்க வேண்டும்’ என்றாா்.தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதில் உள்ள இடா்பாடுகளை களைய வேண்டும். வெளிப்படையான நிா்வாகத்தை அதிகாரிகள் நடத்த வேண்டும்’ என்றாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளாக அரிசி அட்டைகளாக மாற்ற பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள தனி நபா் குடும்ப அட்டைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளது. மண்ணின் தரத்திற்கு ஏற்ப உரம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.