வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வி.ஐ.பிக்களும் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது விருப்ப மனு விநியோகத்தை முடித்துவிட்டன. இந்தநிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பாக காவல் அதிகாரிகள், நடிகர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்திருக்கிறார்கள்.
அதிமுகவில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்திருக்கிறார்கள். இதில் கணிசமானோர், முதல்வர் ஜெயலலிதாவுக்காக விருப்பமனு அளித்துள்ளனர்.
அதோடு, நடிகர் வையாபுரி, செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின், மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் டிஜிபி நடராஜனும், அதிமுக சார்பாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார்.
தவிர, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளும் அதிமுகவில் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். . சென்னை மது விலக்கு காவல் உதவி ஆணையராக இருக்கும் பீர்முகமது திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார். சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் கணேசன், நன்னிலம் தொகுதி மற்றும் சேலம் தெற்கு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது விதி. இவர்கள், பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. ஆனாலும், வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, விருப்பமனு போன்ற “ஃபார்மாலிட்டிகளை” மீறி வேட்பாளர்களை அறிவிப்பது உண்டு. ஆகவே இது போல, விருப்ப மனு அளிக்காதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
திமுகவிலும் இது போன்று பலர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். நடிகர் பூச்சி முருகன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். . அதே போன்று நடிகர் வாகைச் சந்திரசேகரும் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார்.
மேலும் பா.ஜ.க. சார்பில் நடிகர் நெப்போலியன், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு போன்று பல கட்சியிலும் பல வி.ஐ.பிகள் இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.