சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள  தனியார் பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். இவர்  கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவரிடம் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் 7 ஆண்டுகளுக்கு தற்போது புகார் கொடுத்துள்ளார். தான் பள்ளியில் படித்தபோது, கராத்தே பயிற்சி பெற்றேன். அப்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது அண்ணா நகர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கெபிராஜை  கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில், கெபிராஜ்சு, ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்னிலையில் இன்று‘ விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “7 ஆண்டுகளுக்குப் பின்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புகார். மனுதாரர் 2 வாரங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரைக் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து விட்டனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த   அரசு வழக்கறிஞர், “மனுதாரர் புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாமல் வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதில், சிறுமிகளும் அடங்குவர். தனக்கு 13 வயதாக இருக்கும்போது பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.

இதையடுத்து,  மனுதாரர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிய வாய்ப்பு உள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.