சென்னை: தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் ரூ.2000 உடன் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் திடீரென நியாய விலை கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகஅரசு கொரோனா நிவாரண நிதியாக ஏற்கனவே 2ஆயிரம் வழங்கிய நிலையில், நேற்று முதல் 2வம் தவணையாக ரூ.2ஆயிரம் உடன்  14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணங்கள் பெற கடந்த இரு நாட்களாக டோக்கன் விநியோகம் நடைபெற்றது. மேலும், கூட்டத்தை தவிர்க்கும் வகையில்,  இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்,  நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கவும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக ரேஷன் கடையில் இன்று ஆய்வு செய்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு நிவாரணப் பொருட்கள், தொகை முறையாக வழங்கப்படுகிறதா என்று ரேசன் கடைக ஊழியர்களிடமும், அதை வாங்க பொதுமக்களிடமும் விசாரித்து தெரிந்துகொண்டார்.

தொடர்ந்து ஒருசிலருக்கு தனது கைகளால் நிவாரணப் பொருட்கள், நிவாரணத் தொகையை ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கிவிட்டு  அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.