முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம்; அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவையடுத்து டிஜிபி திரிபாதி பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆணையிட்டிருக்கிறார்.

பெண் காவலர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி வெளிவந்ததும் ‘மிகமிக அவசரம்’ படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சியை அனைவரும் பாராட்ட ஆரம்பித்தனர் .

ஶ்ரீ பிரியங்கா நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மிக மிக அவசரம். சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய இப்படத்தை, லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர் வெளியிட்டு இருந்தார். இந்த படம் பாதுகாப்புக்கு சாலையில் நிற்கும் ஒரு பெண் காவலரின் பிரச்சினைகள் பற்றி பேசியது.

தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கு நன்றி தெரிவித்து ரவீந்திரன் சந்திரசேகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் :

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வாங்கி வெளியிட்டோம். ஆனால் இப்படம், வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது. இந்த நேரத்தில் “முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

இந்த அறிவிப்புக்கு மிக மிக அவசரம் படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாகவும் முதல்வர் அவர்களுக்கும் காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://www.facebook.com/ravindar.chandrasekaran/posts/10218929228923858