பங்தங், மிசோரம்
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் 76 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் எனப் புகழ் பெற்றுள்ள ஜியோனா சானா என்பவர் மிசோரம் மாநிலத்தில் உள்ள பங்தங் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கிறித்துவ மதத்தில் உள்ள சானா பால் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இந்த பிரிவில் சுமார் 400 குடும்பத்தினர் மட்டுமே தற்போது உள்ளனர்.
இந்த பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்குப் பல பெண்களை மணக்கும் உரிமை உண்டு. அவ்வகையில் ஜியோனாவுக்கு 39 மனைவிகளும் அவர்கள் மூலம் 94 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய குழந்தைகளில் 14 மகன்களுக்குத் திருமணம் ஆகி மருமகள்கள் உள்ளனர் இவருக்கு 33 பேரன் மற்றும் ஒரு கொள்ளுப்பேரன் உள்ளனர். இவர்களது வீடு 4 அடுக்குகள் வீடாகும். இதில் 100 அறைகள் உள்ளன.
தற்போது 76 வயதாகும் ஜியோனா கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் உடல் நலம் குன்றி எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்தார். மிசோரம் தலைநகரில் இருந்து மருத்துவர்கள் தினமும் வந்து இவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் சுயநினைவை இழந்ததால் தலைநகர் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவுக்கு மிசோரம் முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகவும் சிறிய ஊரான பங்கங் கிராமம் ஜியோனாவால் புகழ் பெற்று பலரும் அங்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.