டில்லி

பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கோழையைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இரண்டாம் அலை கொரோனா பற்றி மருத்துவ நிபுணர்கள் தொடர் எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதைக் கண்டு கொள்ளாததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பிரதமர் எதிர் கொள்ள அஞ்சுவதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ்  பொதுச் செயலர் பிரியங்கா காந்தி நேற்று சமூக வலை தளங்களில்’யார் பொறுப்பு என்னும் தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.   அந்த பதிவில் காணப்படுவதாவது.

”நமது பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. மாறாக அரசியல் தான் முக்கியம். அவருக்கு உண்மையைப் பற்றி கவலை இல்லை.  தன்னை விளம்பரப்படுத்துவதே முக்கியம் ஆகும்.   உண்மையில். திறமையான அரசு என்பதின் அர்த்தம், நெருக்கடியின் போது பொறுப்பேற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகும்.

பிரதமர் மோடியின் அரசு தொற்றின் ஆரம்பம் முதலே உண்மையை மறைத்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.  பல உலக நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த போது செயல்படாமல் இருந்து விட்டு, 2021 ஜனவரியில் தடுப்பூசிக்குப் பிரதமர் மோடி ஆர்டர் கொடுக்கிறார்.

இதையே கோடைக் காலத்தில் செய்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். மொத்தத்தில் பிரதமர் ஒரு கோழையைப் போல் செயல்படுகிறார். அவர் நிபுணர்கள், விமர்சகர்கள், கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சியினரை அச்சமின்றி சேர்த்துக் கொண்டு கொரோனாவுக்கு எதிராகச் செயல்படவில்லை.”

என தெரிவித்துள்ளார்.