சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 70பேருக்கு தொடர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா2வது அலை நாடுமுழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்தது. அதைத்தொடர்ந்து 15 நாள் தளர்வுகளற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் சற்றே குறையத்தொடங்கியுள்ளது. இருந்தாலும் 11 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் தீவிரமாகவே உள்ளது. தலைநகர் சென்னையில் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக குடிநீர் வாரியம் மூலமாக தினமும்83 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ள இடங்களில் 1.6 கோடி லிட்டர் தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் வாரியத்தில் இதுவரை 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சி அடைய வைக்கிறது. உயர் அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 50 பேர் குணமடைந்திருக்கும் நிலையில், 70க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரிகள், களப்பணியாளர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.