மன்னித்துவிடு

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

“செல்லம்மா, இன்னையோட நம்ப படிப்பு முடியுது தெரியுமா ?”

“தெரியும் மேகன் என்ன பண்ண சொல்றீங்க? படிப்பு முடிஞ்சா பொட்டி, படுக்க புக் எல்லாம் கட்டிகிட்டு ஊருக்கு கிளம்பணும் அவ்வளவுதான்” என்றாள் செல்லம்மாள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு

“தூங்கறவங்களை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை …..கஷ்டம்” என கோபம் பொங்க கூறினான் மேகன் .

(சற்று நேரம் அமைதி)

“இங்க பாரு செல்லம்மா என் கூட நீ அஞ்சு வருஷம் படிச்சாலும் நான் இப்ப ஒரு வருஷத்துக்கு முந்தி தான் உன்மேல ஆசைப்பட்டேன் ,நண்பர்களாக இருக்கலாமே அப்பிடின்னு நீசொல்ற, எனக்கு நண்பர்கள் எல்லாம் அதிகம்தான், உன் கூடவே இருக்கணும் உன்னை நான் வாழ்க்கை பூரா காதலிக்கணும் இதுக்கு மேல என் காதலை உன் கிட்ட சத்தியமா சொல்லி புரிய வைக்க முடியாது” என்றான் மேகன்

செல்லியம்மாள் தமிழ்நாட்டில் ஒரு பின்தங்கிய மாவட்டத்திலிருந்து ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து, நிறைய மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம் படிக்க சென்னைக்கு வந்தவள்.

வந்த புதிதில் சென்னையை பார்த்து மிரண்டதை விட சக மாணவர்களைப் பார்த்து தான் மிரண்டு போனாள் செல்லி.

கிராமத்தில் இருந்து வந்ததால் மிக மிக எளிய உடைகளும், எண்ணய்வைத்து வாரிய நீண்ட பின்னலும், விலை குறைவான ரப்பர் செருப்பும், அதிக அலங்காரம் இல்லாமல் இயல்பாக வந்ததும், அவளை வேறுபடுத்திக் காட்டியது, அவள் தோற்றமே அவளுடைய வறுமையை கோடிட்டு காட்டியது,

பல மாணவர்களின் கேலிக்கு உள்ளாகினாள், மேகன் மற்றும் வேறு சில மாணவர்கள அவளுக்கு பக்கபலமாக இருந்தனர் அதனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டாள்.

முதல் இரண்டு வருடம் மேகன் அவளுக்கு உதவி செய்தான், தைரியமூட்டுவான், நகரத்தில் எப்படி நடந்து கொள்வது, என ஒரு நல்ல நண்பனாக அவளைப் பார்த்துக்கொண்டான் .

படிப்பு முடிவதற்குள் அவள் படிப்பில் ஒரு சிறந்த இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியம்  அடைய வைத்தாள்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக ஏனோ செல்லியின் மீது காதல் கொண்டான் ஆனால் செல்லி இன்றுவரை அவனுடைய காதலை ஏற்கவில்லை

“மேகன், நீ பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தானே?”

“ஆமாம்” என்றான் மேகன்

“ஆனா நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சினிமாவில் கூட  நீ பார்க்காத கிராமம், இன்னும் அங்கே சாதி, குலம், குறிப்பிட்ட கோயிலுக்கு இன்னொரு சாதிக்காரங்க வரக்கூடாது, டீக்கடையில சாதிக்கு ஒரு டம்ளர் இதெல்லாம் இருக்குது, கேள்விப்பட்டு இருக்கியா?”

“கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேன்… பார்த்ததில்லை”

“ஆனா நான் அங்கேதான் பிறந்து வளர்ந்தேன் அதில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்

ஒரு நிகழ்ச்சியை சொல்லட்டுமா அப்ப நான் சின்ன பொண்ணு 15 வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரிலிருந்து  நான்கைந்து அக்காக்களை நகரத்துல இருக்கிற கல்லூரியில் முதன்முதலா சேர்த்துவிட்டாங்க ஊரே அதிசய பட்டது.

அந்த அக்காக்களுக்கு அப்படி ஒரு மரியாதை, ஆனால் கல்லூரி முடித்ததும் அதுல ஒரு அக்கா ஜாதி மாத்தி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அந்த பையனின் ஊரும் எங்கள் ஊருக்கு பக்கத்தில் தான் இதனால் ஜாதி கலவரம் மூண்டது ஊரே அல்லோகலப்பட்டது, தீ வைக்கிறது, வீட்ட சூறையாடுறதுன்னு  ரெண்டு கிராமமும் மாத்தி மாத்தி பழி வாங்கிகிட்டாங்க,

அதுக்கு அப்புறம் போலீஸ், கேஸ், கோர்ட், ….. அது அதைவிட கொடுமை, இதுக்கிடையில அந்த அக்காவின் குடும்பமே தல குனிஞ்சு நின்னது

அப்ப அந்த அக்காவுடைய அப்பா, அம்மா ரெண்டு பேருமே அவமானத்தால் தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க, அப்பப்பா நினைத்தாலே உடம்பு நடுங்குது அப்படியொரு பயமான இறுக்கமான சூழல் அது” என்று கண்ணீர் விட்டாள்.

“அப்ப எங்க ஊர் பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு தீர்மானம் போட்டாங்க,

இனி எந்த பொம்பள பிள்ளைகளும் காலேஜுக்கு போகக் கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டாங்க, ஊர்ல இருக்கிற எட்டாவது வகுப்போடு நிறுத்திட சொல்லிட்டாங்க. ஊர்கட்டுபாட்ட யாரும் மீறல .

அதுக்கப்புறம் பொம்பள புள்ளைங்களை எட்டாம் வகுப்புக்கு மேல படிக்க வைக்க பயபட்டாங்க

இதோ இத்தனை வருஷம் கழிச்சு நானும் இன்னும் ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க கெஞ்சிக் கூத்தாடி அழுது, இங்க படிக்க வந்திருக்கோம்…

வாழ்கையில் சாதனை அப்பிடின்றது எனக்கு  இந்த படிப்புதான் ஆனா உங்களுக்கு இது சாதாரணம் மேகன்” என்றாள்

“இதுதான் காரணம் என்றாள்”, செல்லி.

“நீ சொன்னதை கேட்க மனசு கஷ்டமா தான் இருக்கு செல்லியம்மா, வா, நீயும் நானும் ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாம், ஊர் பக்கம் போகாத, நீ, நான் உன்னைய பார்த்துக்குறேன்,” என்றான் மேலும் “நான் உங்க ஊருக்கு எல்லாம் வந்து சண்டை போட மாட்டேன், நான் இருப்பது சென்னை பயப்படாத” என்றான்,

விரக்தியுடன் செல்லி சிரித்தவாறு சொன்னாள், “நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விஷயம் இல்ல, இப்ப நான் அப்படி பண்ணிட்டா இனி அடுத்து வரும் எங்க ஊர் பெண் பிள்ளைகளுக்கு படிக்க  வாய்ப்பு கிடைக்காது, எட்டாம் வகுப்பு  முடிஞ்சா கல்யாணம் ஆயிடும்

செல்லிய படிக்க வச்சு என்ன பிரயோஜனம்? ஓடிட்டா!! என ஊர் பேசும் அதனால் நான் அந்த குழந்தைகளுடைய படிப்பு வளர்ச்சிக்கு தடையாக இருக்க மாட்டேன் மேகன்.”

“அது சரி இப்ப என்ன செய்யப் போற?”

“நான் அடுத்த சில வருஷத்துக்கு எங்க ஊர்ல தங்கி மருத்துவம் பார்ப்பேன், அது கிராமத்து மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் படிப்பின் மீது மரியாதை வரும்,

தன் பிள்ளைகளையும் படிக்க வைக்க அங்கிருப்பவர்கள் ஆசைப்படுவாங்க நெறய பெண் குழந்தைகள் கல்லூரி வரை போவார்கள்

அது எனக்கு சரின்னு படுது மேகன்” என கண் கலங்கினாள்.

அதை கேட்ட மேகன், “இதுவரை உன் மேல காதல் மட்டும்தான் இருந்துச்சு இப்போ உன் மேல தனி மரியாதை  வந்துடுச்சு செல்லி டாக்டர் பணியை உங்க கிராமத்தில் செய், வாழ்த்துக்கள்!!!” என கண் கலங்கியவாறு திரும்பிப் பார்க்காமல்  நடந்து சென்று விட்டான் அவன் போனது தான் தாமதம் கண்ணீர் ஆறாக கொட்டியது

காதல் இதயம் விம்மியது சாரி, மேகன் என்னை மன்னிச்சிடு நீயாவது ஒரு வருஷமா தான் என்னை காதலிக்கிற நான் உன்னை பார்த்த அன்னைக்கு இருந்தே காதலிக்கிறேன் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை என்னை மன்னித்துவிடு என தனிமையில் அழுது தீர்த்தாள் அந்த வைராக்கியப்பெண்

அவர்கள் அமர்ந்திருந்த அந்த மரம் ஏதோ புரிந்து கொண்டதைப்  போல அவள் மீது இலைகளையும் பூக்களையும் தூவியது.