சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி (சனிக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
தமிழக முதல்வர், நாளை காலை சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார். அங்கு கல்லணை பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடுவதுடன், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் திருச்சியில் ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து நாளை மறுதினம் சேலம் மாவட்டம் செல்கிறார். அங்கு ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர், மேட்டூர் அணையைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலாசனை நடத்துகிறார். காலை 10.45 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவைக்கிறார். பின்னர் முதல்வர் சென்னை திரும்புகிறார்.
இதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க 5, 8,16 என 29 கதவுகள் உள்ளன. இதில் பருவ மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். இதனிடையே, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எந்திரம் மூலம் நெல் நாற்றுக்களை நடுவதற்கு ஏதுவாக இப்போதே பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.