போபால்
மத்தியப் பிரதேச முதல்வரால் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட துஷார் பஞ்சால் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் எதிர்ப்பால் பதவி ஏற்க மறுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது சிறப்புப் பணி அதிகாரியாக துஷார் பஞ்சாலை நியமித்தார். இதையொட்டி துஷார் தனது டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்தார். அவர் தனது பதிவில் தாம் 2001 முதல் பல முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பணி புரிந்ததாகவும் இன்று தமது அதிர்ஷ்டத்தால் மத்தியப் பிரதேச முதல்வருடன் பணி புரிய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு டில்லி பாஜக செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். முன்பு துஷார் பதிந்துள்ள பழைய டிவிட்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவராஜ் சிங் சவுகான் அவர்களே உங்களுக்கு இவரைப் போன்ற உதவியாளர்கள் தேவையா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த ஸ்கிரீன் ஷாட்டில் முன்பு அவர் இந்துக்கள் மற்றும் மோடிக்கு எதிராக இட்டதாக கூறப்படும் பதிவுகள் இடம் பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்து டில்லி ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் துலி துஷாரின் பழைய டிவீட்டை சுட்டிக் காட்டி “மத்தியப் பிரதேச மாநிலம் பல நல்ல கலாச்சாரம் மற்றும் திறமையான பத்திரிகையாளர்களைக் கொண்டது. அவர்களில் ஒருவரை எடுத்துக் கொள்ளாமல் ஏன் சிவராஜ் சிங் இவரை தேர்வு செய்துள்ளார்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பல பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையொட்டி துஷார் பஞ்சால் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தம்மால் இந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து கடிதம் எழுதி உள்ளார். மேலும் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துள்ளார்.
[youtube-feed feed=1]