ராய்பூர்

விலைவாசியைக் குறைக்க உணவு உண்பதை நிறுத்த வேண்டும் என ஒரு சத்தீஸ்கர் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூறி உள்ளார்.

நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது..   இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.  தற்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்களில் பலர் வருமானம் இன்றி தவிக்கையில் இந்த விலை உயர்வு அவர்களை மேலும் வதைத்து வருகிறது.    நாட்டில் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையொட்டி சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம், “மோடி அரசு நாட்டுக்குப் பல போலி வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.  ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றாததால் அத்தியாவசிய பொருட்களான, உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.   இது பணவீக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு” எனத் தெரிவித்தார்.

நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் விலைவாசி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஒரு போராட்டம் நடந்தது.   இது குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரிஜ்மோகன் அகர்வால் ஒரு அதிரடி யோசனையைத் தெரிவித்துள்ளார்.

பிரிஜ்மோகன், “இந்த பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இது பணவீக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு என ஒரு கட்சியினர் சொல்கின்றனர்.  அவர்கள் உணவு உண்பதை நிறுத்த வேண்டும்..  எரிபொருளைப் பயன்படுத்த கூடாது.  இப்படிச் செய்தால் விலை தானாகாவெ குறைந்து பண வீக்கம் இருக்காது.  குறிப்பாக அந்த கட்சிக்கு வாக்களித்தவர்கள் இதைச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   அகர்வாலின் பேச்சு அடங்கிய வீடியோவுக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள்  அவர் விவரம் புரியாமல் வாய்க்கு வந்ததை உளருவதாக விமர்சித்துள்ளனர்.   மேலும் பாஜக தலைவர்கள் நிலை தடுமாறி உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நிதின் திரிவேதி, “கட்சி நாட்டுக்குள் தற்போது எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பாஜகவினரின் அணுகுமுறையை இந்த பேச்சு தெளிவாக்கி உள்ளது.   மேலும் பாஜக உள்ளேயே முன்னாள் முதல்வர் ரமண் சிங் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷ்டியினரிடம் உட்கட்சி பூசல் இருப்பது தெரிய வந்துள்ளது” எனக் கூறி உள்ளார்