சென்னை: திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுடன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. மேலும் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுககொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 13 ஆயிரத்து 71 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த 18000 தடுப்பூசிகளில் மீதம் 5000 தடுப்பூசிகள் மட்டுமேஇருந்தது. இது நேற்றும், இன்றும் போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அங்கு நாளை (ஞாயிறு) தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், கோவையிலும் 5 மண்டலங்களில் தடுப்பூசி போடும்பணி நாளை நிறுத்தப்பட்டுஉள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தடுப்பூசிகள் இருப்பு குறைந்துள்ளதால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
15ஆம் தேதிக்கு பிறகு மத்தியஅரசு தடுப்பூசி அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. திருச்சியில் தற்போது 900 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் அவை மத்திய சிறைக்கைதிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு போடப்படும் என்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாகவும், தடுப்பூசிகள் வந்த பிறகு மீண்டும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை மாநகராட்சியிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர ஆணையர் குமாரவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 80 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக தடுப்பூசிகளை வழங்கினால் மட்டுமே கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.