சென்னை
சென்னை நகரில் கொரோனா கட்டுப்பாடு மண்டல எண்ணிக்கை ஒரே வாரத்தில் பாதியாகக் குறைந்துள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை ஒரே தெருவில் 10 பேருக்கு மேல் கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த தெரு கட்டுப்பாடு மண்டலமாக சென்னை மாநகராட்சி அறிவிக்கிறது. அவ்வகையில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி சென்னை நகரில் 765 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. இதைப் போல் 6200 தெருக்களில் குறைந்தது ஒரு கொரோனா நோயாளியாவது இருந்தனர்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விவரங்களின் படி கடந்த மே மாதம் 31 ஆம் தேதி அன்று அதாவது ஒரே வாரத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை 365 ஆகக் குறைந்துள்ளன. அதாவது பாதிக்கு மேல் குறைந்துள்ளன. இதைப் போல் தற்போது ஒரு கொரோனா நோயாளியாவது உள்ள தெரு 4400 ஆகக் குறைந்துள்ளன.
இதில் வடக்கு பகுதியில் 58% கட்டுப்பாட்டு மண்டல குறைவு காணப்படுகிறது. மத்திய பகுதியில் 56% குறைந்துள்ளது. அதே வேளையில் தெற்கு பகுதியில் 34.78% மண்டலங்கள் மட்டுமே குறைந்துள்ளன. மத்திய சென்னையில் இதற்கு முன்பு அதிக அளவில் கட்டுப்பாடு மண்டலங்கள் அதிகம் இருந்தன.
கடந்த 31 ஆம் தேதி கணக்குப்படி கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள எந்த ஒரு தெருவிலும் 50 பேருக்கு மேல் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மே மாதம் 24 ஆம் தேதி கணக்கின்படி 8 தெருக்களில் 50க்கும் அதிகமான நோயாளிகள் இருந்தனர். அதற்கும் ஒரு வாரம் முன்பு அதாவது மே மாதம் 17 ஆம் தேதி ஒரு சில தெருக்களில் 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தனர்.
இவ்வாறு ஒரே வாரத்தில் குறிப்பிடத் தக்க அளவுக்குக் குறைவு ஏற்பட்டதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் பணியும் ஊரடங்குக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பும் காரணம் எனக் கூறப்படுகிறது, கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் அதிகாரிகள் தங்களது கண்காணிப்பைக் குறைத்துக் கொள்ளப் போவதாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.