சென்னை: தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச்செயலகத்தில், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இயக்குனர் பாரதி ராஜா ஆகியோர் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத முதல்வர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறறிவாளன் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்து, அவர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வர உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்து பேசியதாகவும், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது.

முதல்வருடனான சந்திப்பு முடிந்து, செய்தியாளர்களை சந்தித்த சீமான், ”தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. என்று வாழ்த்து தெரிவித்தோம்.பின்னர்,7 பேர் விடுதலை குறித்து பேசியபோது, அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்கு,உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.எனவே, நீதிமன்ற தீர்ப்பில் என்ன வருகின்றது என்று பார்த்துவிட்டு,நாம் மேற்கொண்டு 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் என்றார்.

மேலும் 7 பேர்  விடுதலை தொடர்பான அனுமதிக்கான கையெழுத்து ஆளுநரிடமிருந்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது. எனினும், அவர்களின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்வோம்”, என்று முதல்வர் கூறியதாகவும்  சீமான் தெரிவித்துள்ளார்.