சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வரக் கூடாது சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வதுஅலையின் தீவிர தாக்கம் காரணமாக, தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடந்த 15 நாட்களாக அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்கம் 7ந்தேதி காலை 6 மணியுன் முடிவடைய உள்ளது. தற்போது தொற்று பரவல் சற்றே குறையத் தொடங்கியதால், தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டும் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள அதிகாரிகளுடன்  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என விசாரித்தும், வியாபாரிகளிடம் விசாரணை நடத்திஹயம்  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது,

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக  தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.  மதியம் 12 மணிவரை கோயம்பேட்டில் கடைகளை வைத்துள்ள  வியாபாரிகள், தொழிலாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

வரும், ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு வணிக வளாகம் செயல்படும்.அனைவரும்  முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக்கவசம் அணியாமலும் இருந்தாலும், கடைகளில் அதிகமான கூட்டத்தை சேர்ப்பதும் கண்டறியப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு அரசின் தீநுண்மி கால வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.