ltte
கொழும்பு:
தமிழர் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்க ராஜபக்ஷேவிடம் விடுதலைப் புலிகள் கோடி கணக்கில் பணம் வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே பதவி காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் கூண்டோடு அழிக்கப்பட்டது. அதன் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமான ராஜபக்ஷே பதவிக்கு வர விடுதலைப் புலிகள் பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எமில் காந்தன் என்கிற ஆன்டன் சாமில் லட்சுமி கண்ணன் என்பவர் தற்போது மேற்கத்திய நாடுகளில் வசிக்கிறார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி மேலாளராக செயல்பட்டு வந்தவர். அவர் தான் இந்த அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:
2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்தனர். இதனால் அவரது வெற்றி உறுதியாக இருந்தது. இதையடுத்து ராஜபக்ஷே விடுதலைப் புலிகளுடன் மறைமுக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ரணில் விக்ரமசிங்கேவை தோற்கடிக்க திட்டமிட்டார்.
இதையடுத்து தமிழர்களை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ராஜபக்ஷேவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் உத்தரவுப்படி 6 லட்சம் தமிழர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்ஷே வெற்றி பெற்றார்.
இதற்காக முதல் தவணையாக 180 மில்லியன் ரூபாய் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வைத்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை அதிபராக ராஜபக்ஷே பதவி ஏற்ற பிறகு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ‘ஜெய லங்கா’ திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 3 போலி நிறுவனங்கள் மூலம் 757 மில்லியன் ரூபாய் பெறப்பட்டது. மீதி 130 மில்லியன் பல தவணைகளில் பெறப்பட்டது.
இந்த பண பரிவர்த்தனையில் ராஜபக்ஷே உள்பட அவரது அரசில் சக்தி படைத்தவர்களாக வலம் வந்த பசில் ராஜபக்ஷே, ஜெயசுந்தரா, லலித் வீரதுங்கா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்று பிரச்சாரம் செய்த ராஜபக்ஷே, மறைமுகமாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்திருந்த தகவல் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கொலை முயற்சி வழக்கில் எமில் காந்தன் உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எமில் காந்தனுக்கு ரெட் நோட்டீஸ் மற்றும் பிடிவாரன்ட் பிறப்பித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருப்பதாவும், இதற்கு ரெட் நோட்டீஸ் மற்றும் பிடிவாரன்ட் இடையூறாக இருப்பதாகவும் எமில் காந்தன் வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இது இரண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம் என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது.