சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பள்ளியான கே.கே.நகர் பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உள்ளார். அவரை மூன்று நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீஸ் விசாரணை முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்களில் வேறு ஆசிரியர்களுக்கும் தொடர்பு உண்டா, பள்ளி நிர்வாகத்துக்கு தெரியுமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ராஜகோபாலனிடம் பல நேரடி கேள்விகளும் கேட்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளில் வந்த காரணம், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டதன் நோக்கம் என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு வருகின்றன.
ராஜகோபாலன் மீது சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டிய குறிப்பிட்ட மாணவிகளின் தீவிரமான குற்றச்சாட்டு குறித்து, ராஜகோபாலிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தும் அனைத்து விசாரணையும் வீடியோபதிவு செய்யப்படுகின்றது. . பல வித கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை அளிக்குமாறு ஆசிரியர் ராஜகோபாலனிடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை காமராவில் ஜூம் செய்து பார்த்து, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததும், அதைக்கொண்டு மாணவிகளை மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பலருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய ராஜகோபாலன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அளித்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில், அவர்மீது பல குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய போலீசார் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, அவரிடம் வாக்குமூலம் பெற்று, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ராஜகோபாலன் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
மேம், விசாரணையின்போது, ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த தகவலின் பெரில், பள்ளி மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியின் பிற ஆசிரியர்ளிடமும் காவல்துறை விசாரணை நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என கூறப்படுகின்றது.
இந்த விவகாரத்தில், காவல்துறை மட்டுமின்றி தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இந்த வழக்கை தீவிரமாக கையாண்டு வருகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் ராஜகோபாலன், புகார் அளித்த மாணவிகள் ஆகியோர் நேரடியாக ஆஜராகி இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.