பெங்களூரு
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடலில் அறிவிக்கப்பட்டதால் கன்னடர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. பலருடைய கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ளக் கூகுள் தேடுதளம் மிகவும் உதவி வருகிறது. பல புத்தகங்கள், குறிப்புக்கள் ஆகியவற்றின் மூலம் நடந்த தேடல் தற்போது கூகுள் தேடுதளம் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. கூகுளில் வந்ததை அனைவரும் நம்புகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கூகுள் தேடு தளத்தில் இந்தியாவின் மோசமான மொழி எனத் தேடிய போது கன்னடம் எனப் பதில் வந்துள்ளது. மேலும் கன்னட மொழி சுமார் 4 கோடி பேர் பேசுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இது கன்னட மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதில் வேறு ஒரு இணைய தளத்தில் உள்ள ஒரு புத்தகத்தில் காணப்படுவதாகவும் அதில் ஏராளமான தவறான தகவல்கள் உள்ளதும் தெரிய வந்தது.
இது குறித்து கன்னடம் பேசும் பல பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், மட்டுமின்றி பிற மொழி பேசுவோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையொட்டி பாஜக மக்களவை உறுப்பினர் மோகன் சரித்திர புகழ் பெற்றதும் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றானதுமான கன்னடத்தை இவ்வாறு சித்தரித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு டிவிட்டரில் அறிவித்தார்.
இதைச் சுட்டிக் காட்டி ஆம் ஆத்மி இளைஞர் அணித் தலைவர் முகுந்த் கவுடாவும் கூகுள் நிறுவன இந்தியத் துணைத் தலைவர் சஞ்சய் குப்தாவுக்குக் கண்டனம் தெரிவித்தார். இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி உள்ளார். இணைய தளங்களில் நெட்டிசன்கள் கூகுளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூகுள் தேடுதளம் இந்த எதிர்ப்புக்களுக்குப் பிறகு அந்த தேடலை நீக்கி உள்ளது.