சென்னை: தமிழகத்தில்  கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கடந்த மே மாதம் மட்டும் 10ஆயிதுக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.  இதற்கிடையில், தமிழகஅரசு அமல்படுத்தி உள்ள முழு ஊரடங்கு காரணமாக, கடந்த  10  நாளாக  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை நடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பானது, கடந்தாண்டு முதல் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதம் (2021)   ஏற்பட்டுள்ள உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு  மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும்  (மே 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை) 10,186 பேர் பலியாகி உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்  மொத்த  எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் கடந்த மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

1-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை தினசரி உயிரிழப்பு 200-க்கு கீழ் இருந்ததது. 8-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 200-ல் இருந்து 300-க்குள் இருந்தது.

15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 300-ல் இருந்து 400-க்குள் இருந்தது. 21-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 400-க்குள் மேல் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது.