பெத்தப்பள்ளி
தெலுங்கானா மாநிலத்தில் ஆக்சிஜன் ஏற்றி வந்த ரயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு நாடெங்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தரை மார்க்கமாக மட்டுமின்றி ரயில் மூலமும் எடுத்துச் செல்லப்படுகிறது.
அவ்வகையில் தெலுங்கானாவில் ஐதராபாத்தில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக 6 ஆக்சிஜன் டாங்கர்களுடன் ஒரு ரயில் நேற்று கிளம்பியது. பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிக்குராயி என்னும் இடத்தில் இந்த ரயில் வந்து கொண்டிருந்த போது டாங்கரில் இருந்து புகை வந்ததைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி உள்ளார்.
ஒரு ஆக்சிஜன் டாங்கர் தீப்பிடித்து உடனடியாக அந்த தீ பரவத் தொடங்கி உள்ளது. இதனால் பதறிப்போன ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ரயில் பத்திரமாகக் கிளம்பிச் சென்றது.