டில்லி
கொரோனா எதிர்ப்பு நடக்கும் போது அர்த்தமில்லாமல் பேசுவது எவ்விதத்திலும் உதவாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று வானொலி மூலம் உரையாடுகிறார். இதற்கு மன் கி பாத் (மனதின் குரல்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்வு இன்று ஒலிபரப்பானது. இது 77 ஆம் நிகழ்ச்சி ஆகும்.
இரண்டாம் அலை கொரோன பரவலால் நாடெங்கும் மக்கள் கடும் பாதிப்பில் உள்ள நிலையில் அது குறித்து பிரதமர் மோடி சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். தனது டிவிட்டர் பதிவின் மூலம் மோடியின் உரை குறித்து அவ்வப்போது ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இன்றைய மன் கி பாத் நிகழ்வு குறித்து ராகுல் காந்தி, “கொரோனா எதிர்ப்பு போராட்டத்துக்குச் சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவையே அவசியத் தேவை ஆகும். அதை விடுத்து மாதத்துக்கு ஒரு முறை அர்த்தமில்லாமல் பேசுவது எந்த வகையிலும் உதவாது” என டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.