காஞ்சிபுரம்:
முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஏராளமான அசைவப் பிரியர்கள் இறைச்சிக் கடைகளை தேடி அலைந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஏராளமான அசைவப் பிரியர்கள் இறைச்சிக் கடைகளை தேடி அலைந்தனர்.

காஞ்சிபுரம் ரயில் நிலையம் மீன் சந்தை, பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதி இறைச்சிக் கடைகள் காவல்துறையினர், வருவாய்த் துறை, பெருநகராட்சி, அலுவலர்களின் கெடுபிடிகளால் அனைத்து கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது.

நாவின் ருசியை கட்டுப்படுத்த முடியாமல் ஊரடங்கு விதிமீறல்களையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன் சந்தைக்கும், தர்கா பகுதி இறைச்சிக் கடைகளுக்கும் படையெடுத்து வந்த நிலையில், கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் மீன், மற்றும் இறைச்சிகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் ஏராளமான அசைவப் பிரியர்கள் திரும்பிச் சென்றனர்.