டெல்லி: அலோபதி மருந்து குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்களை வாபஸ் பெறக்கோரி இந்திய மருத்துவ சங்கர் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாபா ராம்தேவ், அவர்களின் அப்பனால்கூட என்னை கைது செய்ய முடியாது என்று ஆவணவமாக தெரிவித்து உள்ளார்.

கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்தது. மேலும் வைரலானது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய மருத்துவர் சங்கம், ராம்தேவ் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலையிட்டு டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,   கொரோனா போராளிகளை அவமதிக்கும் வகையிலான ராம்தேவ் பேச்சு கண்டிக்கத்தக்கது. ராம்தேவ் தமது கருத்தை உடனே திருமப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதனையடுத்து ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் தமது கருத்தை திரும்பப் பெறுவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதை ஏற்க மறுத்த இந்திய மருத்துவர் சங்கத்தின்  உத்தரகாண்ட் மாநில கிளை, ராம்தேவ், தாம் தெரிவித்த கருத்துக்கு 15 நாட்களில் எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது பிரச்சினையை மேலும் வலுவாக்கியது. இதற்கு ராம்தேவ் சார்பில் பதில் கூறிய  ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவையே கிறிஸ்வத மதம் மாற்றமாக்க முயற்சிக்கிறார் என குற்றம் சுமத்தினார். இதனால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதையடுத்து,   இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி வழிமுறைகளைப் பின்பற்றியும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள்தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியே சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஆனால் ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். ஆகையால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள பாபா ராம்தேவ்,  அலோபதி மருத்துவமுறை மீதான விமர்சன விவகாரத்தில் தம்மை யாராலும் கைது செய்ய முடியாது; உங்க அப்பனால கூட என்னை கைது செய்ய முடியாது என ஆணவகமாக பதில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில்,  ராம்தேவை யாராலும் கைது செய்ய முடியாது.. உன்னால மட்டும் அல்ல.. உங்க அப்பனால கூட கைது செய்ய முடியாது என பேசுவதாக இடம்பெற்றுள்ளது.

இது ராம்தேவ்தான் பேசினாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம்,   மேலும் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையில், அரெஸ்ட் ராம்தேவ் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.