புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்றுள்ளார். இன்னும் அமைச்சரவை பதவி ஏற்கவில்லை. 24 நாட்களுக்கு பிறகு இன்று  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தாக்கம் காரணமாக,  கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.  கொரோனா லாக்டவுனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இநத் நிலையில்,  இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கோப்புடன் சென்றவர், அங்கு ஆளுநர் தமிழிசையை சந்தித்து பேசினார். அப்போது, கோப்பில் கூறப்பட்டுள்ள தகவல் குறித்து விளக்கி, உடனே ஆளுநரிடம் கையெழுத்து பெற்றார்.

இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி “கொரோனா 2வது  அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்   கொரோனா  நிவாரண நிதியாக ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இது விரைவில் வழங்கப்படும் என்றார்.

மேலும், பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை  பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். . தடுப்பூசி தேவையான அளவு கையிருப்பில் உள்ளது அச்சம் தேவையில்லை. முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்றும் வலியுறுத்தினார்,.