சேலம்: சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வந்த 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நாளை மறுதினம் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக கோவிட் கேட் சென்டர்களை திறந்து வருகிறது. அதன்படி சேலம் இரும்பாலை வளாகத்தில் கடந்த வாரம் (மே 20ந்தேதி) 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார். அதையடுத்து, அங்கு மேலும் 500 படுக்கைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து, கூடுதலாக 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் மே 21ந்தேதி நடத்தப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், செய்தியளார்களை இன்று சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் பணி முழுமையாக முடிவுற்றது. தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. நாளைக்குள் சோதனை முடிவடைந்தால் நாளை மறுநாள் நோயாளிகள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.