வாரணாசி

த்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இறந்த உடல்களை வீசுவதை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது.

கொரோனா மரணம் நாளுக்கு நாள் நாடெங்கிலும் கடுமையாக அதிகரித்து வருகிறது.  இதனால் பல இடங்களில் சுடுகாடுகளில் இறந்தவர்கள் சடலங்கள் எரியூட்டக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..  பல மாநிலங்களில் தகன மேடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   ஆயினும் சடலங்கள் காத்திருப்பு குறையாமல் உள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிர் இழந்தோர் உடல்களைக் கங்கை நதியில் வீசி விட்டுச் செல்லும் அவலம் நிகழ்ந்தது.   இது அதிகரித்து நதியில் பல உடல்கள் மிதக்கத் தொடங்கின.  இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ஒரு சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இவ்வாறு கொரோனா மரண சடலங்களை ஆற்றில் வீசி விட்டு செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி வாரணாசி பகுதியில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.  வாரணசி நகர நிர்வாகம் சார்பில் 4 டிரோன்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.  இந்த பணியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.   கங்கை நதியின் இரு கரைகளிலும் பறக்கும் இந்த டிரோன்கள் ஆற்றில் யார் எதைக் கொட்டினாலும் படம் பிடித்து காவல்துறைக்கு அனுப்பி வருகிறது.