சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள சென்னையில் புறநகர் ரயில் சேவையை  இன்றுமுதல் (செவ்வாய்க்கிழமை) மேலும் 25 சதவிகித சேவையை குறைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி, தமிழகத்தில் ஒருவாரம் பொதுமுடக்கத்தை அறிவித்து உள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதால்,  தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து, சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே அறிவித்து உள்ளது.  ஏற்கனவே புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  மேலும் 25 சதவிகித ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும்,  தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்கள் ‘தொழிலாளர்கள் புறநகர் சிறப்பு’களாக இயக்கப்படுகின்றன என்றும், இந்த ரயில்களில், அடையாள அட்டை உள்ள தனியார், அரசு மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.