திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ஏ.ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டார். இவர் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.
நடைபெற்று முடிந்த கேரளாசட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
இதையடுத்து சட்டப்பேரவை 24ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கூட்டத்தில், எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் வகையில், இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடத்து மாநிலத்தின் 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது, கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஏ.ராஜா என்பவர், சட்டமன்றத்தில் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், வழக்கறிஞர் ஏ. ராஜாவாகிய நான் என்று தொடங்கிய தேவிகுளம் எம்எல்ஏ, தமிழிலேயே முழுமையாக பதவியேற்று கொண்டபேரவையில் இருந்த அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நாளை கேரள சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. திரிதலா தொகுதி எம்எல்ஏ எம்.பி.ராஜேஷை, சபாநாயகர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளது.