சென்னை: வரும் வரை தெரியாது இழப்பின் கோரம் என கொரோனாவின் கோர தாண்டவத்தை தனது இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் அருண்ராஜா காமராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிப்பு, இயக்கம் தவிர்த்து அவர் பாடல்களும் எழுதி வருகிறார்.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுஙககு முன்பு காலமானார். அவருக்கு வயது 38.
தனது மனைவி குறித்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
‛‛என் விழிகளின் வழியே
என் விழிகளின் வழியே
அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டதை கண்ட நொடி முதல் , நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது..
எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள் பிரார்த்தனைகள் அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னைவிட்டுப்பிரித்துவிட்டு சென்றது..
நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.. சக மனிதர்களோடு,மனிதத்தோடு வெறுப்பு ,வன்மம் ,காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால்
இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.
பாதிப்பும் பங்களிப்பும் இங்கு நம்மை மட்டுமே தான் சுழலும்… இங்கு வெற்றி என்பது நம் நண்பர்கள் உறவுகள் மட்டும் காக்கப்படுவது அல்ல.. ஒவ்வொரு உயிரும் தான் நம் அரண்.. இந்த நச்சின் முமு எதிர்வினை நமக்கான ஒருங்கிணைப்பே அன்றி நமக்கான வேறெதுவும் அல்ல.. நாம் இங்கே வாழப்பிறந்தோம் , “வாழ்தல் என்றுமே யாரை எதிர்க்க வேண்டும்” என்று குறுகிவிடாமல் “எதை எதிர்க்க வேண்டும்” என்ற ஓர் புரிதலுக்குள் செல்லுமாயின் எவ்வித நச்சும் மனிதத்தையோ மனித ஒற்றுமை மேன்மையையோ எதுவும் செய்துவிட முடியாது என நான் நம்புகிறேன்.
வாழ்தல் என்றும் மக்கள் மக்களுக்காக மக்களுடனே மட்டுமே, நாம் ஒற்றுமையின்றி் ஒரு பொது எதிரியை எதிர்கொள்வது என்பது மேலும் மேலும் எதிரியை வலுப்பெற வைக்கும்… நம்மால் மனித உயிர்களை மீட்டு எடுத்து வர முடியாது. நாம் வாழ்வது நமை கொண்டாட துடிக்கும் உள்ளங்களுக்காகவே அன்றி பந்தாடத் துடிக்கும் நச்சுக்களுக்காக அல்ல..
பல்லாயிரம் பல லட்சம் பறிகொடுத்தும் இந்த எதிரியை நாம் வீழ்த்தவில்லையெனின் இந்தப்போர் நினைவில் கூட எண்ணிப்பார்க்க எதுவுமின்றி அழிவுகளாகவே எஞ்சி நிற்குமோ என்ற ஓர் அச்சம் நமை கொஞ்சமாவது செயல்பட வைத்தால் நாம் இழப்புகளை தவிர்க்கலாமோ!! அந்த அளவிற்கு ஓர் புரிதலை நமக்கு நாம் கொடுத்துக்கொள்ளும் அவசியம் உணர வேண்டுமோ!!!.. எல்லாம் இருந்தும் எதுவுமில்லாதது போல் ஓர் வெறுமையைப் பரிசளித்துவிட்டு கோடுங்கோல் புரிகின்ற ஓர் நச்சு, அதை நாம் பரிகாசமாக்க நினைத்து பலரை பறிகொடுக்கிறோமோ!!!
வீசும் காற்றில் விசம் பரவிவிட்டது.. இன்னும் அதை உள்ளத்தால் ஒன்றுகூடி எதிர்த்து விரட்ட முடியவில்லை எனில், நாம் தனித்தனி தீவுகளானோம் எனில் வெல்லபோவது மீண்டும் நச்சு தான் , வீழப்போவது ஒன்றாய் நின்று எதிர்க்காதவர்களாகிய நாம் தான்..
நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்பது மனிதனை மனிதனே எதிரியாக்கி வேடிக்கைப் பார்க்கும் மனநிலை.. இங்கே ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான பொது எதிரி வந்தும் தனித்தீவுகளாகவே வாழ்கிறோமோ என்ற ஓர்அச்சம் ஆட்கொண்டுள்ளது..
கண்ணில் படாத கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம் அதே கடவுள்கள்கூட நம் ஒற்றுமையில்லா மனநிலைக் கொண்டு நமை நச்சிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவர்களாகத்தானே இருக்கக்கூடும்…
தினசரி வாழ்வு என்றுமே போராட்டமாகத்தான் இங்கே பல கோடி மனிதங்களுக்கு இருந்து கொண்டு வருகிறது.. அப்போது வாழ்வு நம் வரையறுத்துக்கொண்ட அளவீடுகளுக்குள் மட்டுமே சுழன்றது.. ஆனால் இன்று அந்த அளவீடுகள் மாறி ,வாழ்வதே பெரும் சவால் என்று வந்து நின்றும் அதை நாம் பொருட்படுத்தவில்லை எனில்
வீசும் காற்றில் பரவிய நச்சு நம் சுவாசம் விட்டு நீங்க நமையே பலியாக கேட்டுக்கொண்டே இருக்கும்…
இன்பம் வேண்டுமானால் அவரவர் மனதிற்கு ஏற்றார் போல் மாறலாம் , இழப்பு அப்படி அல்ல , அனைத்தையும் உலுக்கிவிடும்.
நம் இனத்தை நாமே வேரறத்தோம் என்ற வரலாற்றை அள்ளிப் பூசிக்கொள்ள ,,
அறியாமலும் துணிந்துவிட வேண்டாம்..
நமைசுற்றி பரவிய நச்சுக்காற்று நமை பொசுக்கி எறிவதற்குள் அதை வேரறுக்க குறைந்தபட்சம் நம் சார்ந்தவர்களுக்கு தவி்ர்க்க வேண்டிய , கட்டாயம் தவிர்க்கவேண்டிய காரண காரியங்களை ஒரு அடுத்த தலைமுறைக்கான புரிதலாய் எடுத்துரைத்து வழிநடத்தி நமை சுற்றி உள்ள கடைசி உயிர்மூச்சு வரை நச்சு பரவாமல் தடுத்தாலே மட்டும் இங்கு நம் கனவுகள் குறிக்கோள்கள் இன்பங்கள் வாழ்தல் மீட்டெடுக்கப்படும்..
அலட்சியங்களே நம் முதல் எதிரி.. சிலரின்இந்த சிறு அலட்சியங்கள் கூட மிகவும் அக்கறையுடன் இந்நிலையைக் கையாளுபவர்களையும் பாதிக்கும்.. நச்சுக்கிருமியின் ஆயுதம் நமது அலட்சியங்களே.. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ள நமக்கு வாழ்நாள் அவகாசம் உள்ளது… கண்ணுக்கு தெரியாத எதிரியை வேரறுங்கள்.
வலிபட்டு நிற்கும் என்னைப்போன்றோரின் வடுவிற்கு ஆறுதலே .. அதற்கு நன்றிக்கடனாய் இந்த நிலை யாரையும் ஆழ்த்தி அந்தரத்தில் விட்டுவிடக்கூடாது இழப்புகள் என்றும் ரணங்களாகிவிடக் கூடாது என்றெண்ணியே என் நன்றிப்பதிவு இது.
நமை சுற்றி உள்ள ஒவ்வோர் உயிரும் சுவாசிக்கும் காற்றில் பரவிய நச்சை முற்றிலுமாக அழிக்க,நாம் தான் அதை பரவ விடாமல் தடுக்க வேண்டும்…
வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்… அன்புடன் மன்றாடுகிறேன் … மிக மிக அத்யாவசியம் எனில் அதனை நோக்கி செல்லலாம் இல்லை எனில் உங்கள் உறவுகளை பாதுகாக்கும் அரணாக நீங்கள் தான் மாற வேண்டும் ..
நான் தவறவிட்டதை இன்னும் எத்தனயோ லட்சம் பேர்கள் தவறவிட்டதை தயவு கூர்ந்து வேறு யாரும் தவறவிட வேண்டாம்..
“வெற்றிகளில் அதே போல் நாமும் வெற்றி பெறலாம்” என்ற உத்வேகம் இருக்கலாம், அதைக் கொண்டாட உறவுகள் காத்திருப்பார்கள்.. ஆனால் இழப்புகளில் போட்டி போடாதீர்கள்.
இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது..
என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
நன்றிகள்.
எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி.