சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் போன்றவற்றை அரசே விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சென்னையில் 2,635 நடமாடும் அங்காடிகள் அமைக்கப்படு இருப்பதாக மாநகராட்சி ஆணையன் ககன்திப் சிங் பேடி தெரிவித்து உள்ளார். இந்த வாகனங்கள் மூலம் தெருத்தருவாக காய்கறி பழங்கள் விற்பனை 7 மணி முதலே தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, இன்றுமுதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டத்தின்போது, காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (ஞாயிறு) கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் மொத்தமாக வாங்கி வைக்கத் தேவையில்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். அதன் படி இன்று காலை 7 மணி முதலே சென்னையில் பல இடங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு காய்கறி பழங்கள் விற்பனை தொடங்கி விட்டதாகவும் சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே 24) முதல் காய் மற்றும் பழங்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய வணிகா் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வணிகா் சங்கங்களின் சாா்பில் 2,000 வண்டிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 600 வண்டிகள், கூட்டுறவுச் சங்கங்களின் சாா்பில் 35 வண்டிகளில் காய்கனிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
தேவையின் அடிப்படையில் மண்டல அலுவலரின் அனைத்து வாா்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் வணிகா்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். காய் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்குத் தேவையான பதாகைகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும். விற்பனையாளா்களுக்கு மண்டல அலுவலா்கள், மாநகர வருவாய் அலுவலருடன் ஒருங்கிணைந்து தேவையான அனுமதி சீட்டு வழங்குவா்.
இந்த நடமாடும் அங்காடிகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். இந்த வண்டிகளில் ரொட்டி, முட்டை மற்றும் பூக்கள் விற்பனை செய்யலாம். மின்னணு தளங்கள் மூலமாக காய் விற்பனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுகா்வோருக்கு வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடமாடும் காய் அங்காடி குறித்த வருகை மற்றும் அதிக விலை போன்ற தகவல்களை 94999 32899 என்ற செல்லிடப்பேசி எண் மற்றும் 044 45680200 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கனிகளின் விலை வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் காய்கறி கடைகளில் விலையும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்