சென்னை:
தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு முப்பதாயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தற்போது தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரத் தமிழக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. முன்பு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில் தற்போது ஒருவாரத்திற்குத் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். இரட்டை முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ட்வீட் வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை டாக் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே வந்தால் (இரட்டை) முகக் கவசம் அணியுங்கள். குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவைதான் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நம்மால் நமது குடும்பத்தினர்கள் பாதிக்கக் கூடாது. நீங்கள் அனைவரும் சாம்பியன்கள். விரைவில் கொரோனாவிலிருந்நது மீள்வீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.