டெல்லி:வாரக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்தை விற்று பணம் வசூலிக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடன் வசூல் தொடர்பாக மத்திய அரசு 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசாணை வெளியிட்டது. அதன்படி, திவால் சட்டத்தின் கீழ் நலிவுற்ற நிறுவனங்களை புனரமைக்கும் போது அந்நிறுவனங்களின் கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து வாரக்கடனை வங்கிகள் வசூலிக்கலாம் என்று அறிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பலகட்ட விசாரணையை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பில், வாரா கடனுக்காக திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ள நீதிபதிகள், இதே சட்டத்தில் நலிவுற்ற நிறுவனங்களும் புணரமைக்கப்பட்டு புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட வழிவகை செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இந்த சீரமைப்பு திட்டத்தில் தனிநபர்கள், நிறுவனங்கள் அளித்த உத்தரவாதமும் அடங்கும் என்பதால் மத்திய அரசின் ஆணை செல்லாது என அறிவிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், நிறுவனங்கள் கடன் பெறும்போது அளிக்கும் சொத்து உத்தரவாதத்திற்கும் அதே கடனுக்கு தனிநபர்கள் அளிக்கும் உத்தரவாதத்திற்கும் தனித்தனி ஒப்பந்தங்கள் செய்யப்படுவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே திவால் சட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன் தள்ளுபடி சலுகையை உத்தரவாதம் அளித்த தனிநபர்களும், நிறுவனங்களும் கோர முடியாது என்பதால் வாரக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்துக்களை விற்று பணத்தை வசூலிப்பதற்கான மத்திய அரசின் ஆணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளனர்.