கொரோனா பரவலில் நிர்வாக சீரழிவை சந்தித்துவரும் மோடி அரசு, பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் முனைப்புடன் செயல்படுத்தி வருவதை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

பொதுமக்களிடமும் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் மோடியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. இந்நிலையில், சரிந்த செல்வாக்கை சரிசெய்ய பல்வேறு பொய் பிரச்சாரங்களில் பா.ஜ.க. வினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

‘சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கடிதத்தை திரித்தும், வெட்டியும், ஒட்டியும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, கும்பமேளா குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்திருப்பதாக போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து, இணையதளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.

இந்த போலி கடிதத்தை, பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, விரிவான விசாரணையை மேற்கொண்ட ‘ஆல்ட் நியூஸ்’ இணைய இதழ், இந்த போலி கடிதத்தை வடிவமைத்து காங்கிரஸ் மீது பழிசுமத்தியிருப்பது பா.ஜ.க.வினர் தான் என்று அதில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பா.ஜ.க.வினரின் இந்த மோசடி குறித்து டெல்லி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த சதிக்கு உடந்தையாக செயல்பட்டுள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பி இருக்கிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

அதற்காக காங்கிரஸ் கட்சியின் மேல் அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு மோசடி கடிதங்களை தயார் செய்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.