திருவனந்தபுரம்

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதலால் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.   இரு தரப்பினரும் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.   இவ்விரு நாடுகளிலும் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.  குறிப்பாகக் கேரள மாநிலத்தை சேர்த்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த ஒரு வான்வெளி தாக்குதலில் இஸ்ரேலில் வசித்து வரும் சவுமியா சந்தோஷ் என்னும் கேரளப் பெண் உயிர் இழந்தார்.   இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.  இதற்கு நாடெங்கும் உள்ள பலர் சவுமியாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.