சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்திட்டுள்ள கொரோனா நிவாரண நிதியின் முதல்கட்ட தவனையாக ரூ.2000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று காலை தொடங்கி உள்ளது.
இந்த டோக்கன்கள் எந்தவொரு அரசியல் தொடர்பான அடையாளங்கள் இன்றி, தமிழகஅரசு முத்திரையுடன் காணப்படுகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பகுதி நேரம் சிறுகடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மக்களின் அன்றாட பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.4000 வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
அதில், முதல்கட்டமாக ரூ.2000 வரும் 15ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, இன்றுமுதல், அதற்கான நிகழ்ச்ச்சி தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. முதல்வர் பயனாளிகளுக்கு நிவாரண நிதியை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில், இன்றுமுதல் நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் நிவாரணம் பெற்றுக்கொள்ளும் வகையில், டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த டோக்கன்களில் எந்தவிரத அரசியல் சின்னங்களோ, குறிப்புகளோ இடம்பெறாமல், தமிழகஅரசு லோகோ மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த டோக்கன்களை ரேசன் கடை ஊழியர்களே வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
கடந்த ஆட்சியின்போது, டோக்கன் என்ற பெயரில், அதிமுகவினர் அவர்களின் அடையாளங்களை குறிப்பிட்டு, கட்சியினர்களே டோக்கன்களை வீடு வீடாக வழங்கியதுடன், பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றது அனைவரும் அறிந்தோம்.
ஆனால், ஸ்டாலின் அரசு, கட்சியினர் தலையீடு இன்றி டோக்கன் வழங்க உத்தரவிட்டு, அதை செம்மையாக வழிநடத்தியும் வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.