சென்னை:
பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதையொட்டி இன்று முழு ஊரடங்கை மாநில அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பொது மக்கள் தங்களை தயார் செய்து கொள்ளும் பொருட்டு, இரவு 9 மணி வரை அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்கான சில சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகைக்கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் நேற்றும், இன்றும் அவர்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் வழிகாட்டு நெறிமுறைகளையும், விதிகளையும் பொது மக்கள் பின்பற்றி கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.