கரூர்:
கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்பாலாஜி, கடந்த மார்ச் 15-ம் தேதி கரூர் தொகுதி திமுக தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் 11 மணிக்கு கையெழுத்திட்டதும், 11.05-க்கு ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் யாரும் தடுக்கமாட்டார்கள், அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள், அவர்கள் யாரும் இங்கு இருக்க மாட் டார்கள் எனவும் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது.
இந்நிலையில், மே 2-ம் தேதி திமுக வெற்றி பெற்ற பிறகு, கரூர்மாவட்டம் காவிரி ஆற்றில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவது போன்றும், காவிரி ஆற்றில் ஏராளமான மாட்டுவண்டிகள் மணலுடன் இருப்பது போன்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியது: கரூர் மாவட்டம் புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பதால், கதவணை கட்டும் பணியை பாதிக்காமல் இருக்க பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு, தண்ணீரை திருப்பி விடும் பணி கடந்த மாதம் முதல் நடைபெறுகிறது. இதை மணல் எடுப்பதாக கூறி சிலர் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வருகின்றனர். மேலும், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது போன்ற பழைய வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இப்படி தவறாக பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திரங்களை பயன்படுத்தியோ, மாட்டு வண்டி மூலமோ காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்படவில்லை என்றனர்.