சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, கொரோனா நிவாரண தொகையில் முதல்கட்டமாக ரூ.2000 வரும் 10ந்தேதி முதல் வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்பட 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.  முதல்வர் பொறுப்பேற்ற ஸ்டாலின், முதன்முதலாக  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் கோப்பு உள்பட 5 மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதையடுத்து  முதல்கட்டமாக இந்த மாதமே ரூ.2000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 2,07,67000  குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகையை இந்த மாதம் முதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இது குறித்த அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். வரும் 10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ரேசன் ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபடுவர் என்றும்  டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.