சென்னை:
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடபெற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றன. 16-வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அ.தி.மு.க. இடம்பெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். எம்எல்ஏ-க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல், கூட்டம் வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.