சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வேலை நேரம் காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை என, குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ், உறுப்பினர் வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா இரண்டாவது அலையிலிருந்து பாதுகாத்து கொள்ள, வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுகிறது.வங்கி மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள், காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

வேலை நேரத்தின் போது, வாடிக்கையாளர்களுடன், வங்கி அதிகாரிகள் நேரடி தொடர்பு கூடாது. இணை நோயுள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியுடன், வீட்டிலிருந்தே பணிபுரியலாம்.ஆதார் பதிவு மையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் உள்ள வங்கி கிளைகளை கையாள, போலீஸ்உதவியை நாடலாம்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வங்கிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செயல்படலாம்.ஏ.டி.எம்., மற்றும் பணம் மறுசுழற்சி இயந்திரங்கள், தடையில்லாமல் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.வங்கிகளின் வணிக பிரதிநிதிகளின் சேவை, அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

தகுதியுள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கொரோனா தடுப்பூசி போடுவதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.கொரோனா தொடர்பான, முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உட்பட, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

வாடிக்கையாளர்கள், வங்கிகளுக்கு நேரடியாக வருவதை தவிர்க்க, டிஜிட்டல் வங்கி சேவை தளத்தை அதிகம் பயன்படுத்த, வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.